தற்சமயம்
பொருளாதார வல்லுனர்கள் மற்றும் அரசுத் தரப்பிலிருந்து நாம் அதிகம்
கேள்விப்படும் அறிக்கைகள், இந்திய பொருளாதாரப் பின்னடைவுக்கு முக்கிய
காரணம் மானியங்கள்தான், குறிப்பாக எரிபொருட்களுக்குக்
கொடுக்கப்படும் மானியங்கள். அதாவது, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும்
சமையல் எரிவாயு போன்ற மக்களின் அன்றாட வாழ்விக்குத் தேவைப்படும்
பொருட்கள்.
எனவே,
அரசு கஜானா காலியாக மானியங்கள்தான் காரணமென்றும் அதைத் தவிர்க்க இவற்றின்
விலையை மக்களின் தலைமேல் கட்டுவதை 'பொருளாதார சீர்திருத்தம்' என்றும்
மெத்தப் படித்த மேதாவிகள் கூறி வருகின்றனர். அதையேதான்
பொருளாதார மேதையின் தலைமையில் இருக்கும் இன்றைய அரசும் செய்து வருகிறது.
உண்மையில் மானியங்கள் என்றால் என்ன, அது எப்படி நஷ்டப்படும் எண்ணை
நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது, அதன் சுழற்சி முறை என்ன, எண்ணை
நிறுவனங்கள் உண்மையிலேயே நஷ்டத்தில்தான் இயங்குகிறதா மற்றும்
இன்னும் பல கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சியின் ஒரு பகுதியே இது.
மானியம்
என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள பொருளாதாரம் படிக்க வேண்டிய
அவசியமில்லை. நாம் ஒரு பொருளுக்கு செலவு செய்யும் தொகையில் ஒரு பங்கை அரசு
ஏற்றுக்கொள்வதுதான் மானியம் என்றழைக்கப்படுகிறது. ஒரு
தோசையின் விலை 15 என்றால், அதை மக்களுக்கு 12 ரூபாய்க்கு
விற்கச்சொல்லிவிட்டு, மீதி 3 ரூபாயை அரசு அந்தக் கடைக்காரனிடம்
கொடுத்துவிடும். இது வெறும் எடுத்துக்காட்டு மட்டுமே, இன்னும் அந்த
அளவுக்கு நாம் மோசமாகவில்லை.
நம்
நாட்டில் பல பொருட்கள் மானிய விலையில் விற்கப்படுவது மறுக்க முடியாத
உண்மை. அவை அனைத்தும் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் பயனளிக்கக் கூடிய
பொருட்கள் என்பதால் மானியம் என்பது அவசியமான ஒன்றாகவே
அமைகிறது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று 'உரம்' மற்றும் 'எரிபொருள்'.
மானியத்திற்கென்று
ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பங்கு எரிபொருளுக்கே செலவு செய்யப்படுகிறது.
நாம் எரிபொருளாக பயன்படுத்தும் அனைத்திலும் அரசின் மானியம்
அடங்கியிருக்கிறது. அது முறையே, சமையல் எரிவாயு
ஒரு சிலிண்டருக்கு 378 ரூபாய் என்றும், டீசல் ஒரு லிட்டருக்கு 13 ரூபாய்
என்றும், மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு 28 ரூபாய் என்றும், பெட்ரூல் ஒரு
லிட்டருக்கு 17 ரூபாய் என்றும் அரசால் பொதுத்துறை எண்ணை நிறுவனங்களுக்கு
வழங்கப்படுகிறது.
இந்த
எண்ணை நிறுவனங்கள் இரண்டு வகைப்படுகின்றன, ஒன்று கச்சா எண்ணையை இறக்குமதி
செய்து அதை சுத்திகரிப்பு செய்து விற்கும் நிறுவனங்கள் அவை இந்தியன் ஆயில்(Indian Oil),
இந்துஸ்தான் பெட்ரூலியம்(Hindustan Petroleum) மற்றும் பாரத் பெட்ரூலியம்(Bharath Petroleum) போன்ற நிறுவனங்கள். இவைகள்தான் சர்வதேச கச்சா எண்ணை விலை ஏற்றத்தால்
நஷ்டம் அடையும் பொதுத்துறை நிறுவனங்கள்.
உள்நாட்டிலேயே
கச்சா எண்ணை எடுக்கும் நிறுவனங்கள் இரண்டாவது வகைப்படும். அவை
ஓ.என்.ஜி.சி(ONGC), கெயில்(GAIL), ஆயில் இந்தியா(Oil India) போன்ற நிறுவனங்கள். இவை அனைத்தும்
லாபம் ஈட்டும் எண்ணை நிறுவனங்கள். பொதுத்துறை நிறுவனங்கள்
லாபம் ஈட்டியும் கஜானா ஏன் காலியென்று நீங்கள் நினைக்கலாம், இந்த லாபம்
ஈட்டும் நிறுவனங்கள் முழுவதுமாக அரசுக்கு சொந்தமில்லை அதில் தனியார்
பங்கீடும் உள்ளது. ஓ.என்.ஜி.சி-யில் 30.77 % பங்கும், கெயிலில் 42.66 %
பங்கும், ஆயில் இந்தியாவில் 21.57 % பங்கும் தனியாரிடம்
உள்ளது.
மானியம்
என்பது மக்கள் அன்றாட வாழ்வின் இன்றியமையாத பொருட்களுக்கு சென்றடைய
வேண்டுமென்பதுதான் இறுதி இலக்கு. நம் எண்ணம் இப்படி இருக்கையில், அரசு
எரிபொருள்களுக்கு வழங்கும் மானியத்தில் பெரும்பயன்
அடைபவர்கள் யாரென்று பார்ப்போம்.
சமையல்
எரிவாயு : 2011 மக்கள் தொகைக் கணக்கின் படி 72.2 % மக்கள்
கிராமப்புரங்களிலும் 27.8 % மக்கள் நகர்ப்புறங்களிலும் வசிக்கின்றனர்.
ஆனால், மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயுவில் 76 %
நகர்ப்புற மக்களால் பயன்படுத்தப்படுகிறது. சுருக்கமாக 72.2 % மக்கள் 24 %
மானியத்தை மட்டும் அனுபவிக்கின்றனர், 27.8 % மக்களோ 76 % மானியத்தை
அனுபவிக்கின்றனர். இதைவிட அதிர்ச்சியளிக்கக் கூடிய செய்தி, 40 % மானியம்
7.5 % பணக்காரர்களுக்கு சென்றடைகிறது, மிச்சமுள்ள 60
% மட்டும்தான் 92.5 % ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு
சென்றடைகிறது. இந்தக் குறைபாடுகள் களையப்படும் வரை மானியத்தின் முழு பயனை
மக்கள் அனுபவிக்க முடியாது. பொது விநியோக முறையின் மூலம் இந்த குறைபாடுகளை
அகற்ற வாய்ப்புள்ளது.
மண்ணெண்ணெய்
: சமையல் எரிவாயு இணைப்பு இல்லாத வீடுகளில் மண்ணெண்ணெய் அடுப்புதான்
பயன்படுத்தப்படுகிறது. ஏழை மக்களுக்கு மிகவும் பயனளிப்பது
மண்ணெண்ணெய்க்குத் தரப்படும் மானியம்தான். இதிலும் ஊழல்கள்
நடக்காமல் அல்ல, மானிய விலையில் நியாய விலைக் கடைகளில் கிடைக்கும்
மண்ணெண்ணெயில் 40 % ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு சென்றடைவதில்லை.
டீசல்
: டீசல் விலையை பொறுத்துதான் மற்ற பொருட்களின் விலைகள் நிர்ணயம்
செய்யப்படுகின்றன. காரணம், அனைத்து விதமான சரக்கு வாகனங்களுக்கு எரிபொருளாக
பயன்படுத்தப்படுவது டீசல்தான். மேலும் தொழில் நிருவனங்களிலும்,
விவசாயத்துக்கும் டீசல் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு பக்கமிருக்க,
பணக்காரர்கள் வைத்திருக்கும் பெரும்பாலான கார்கள் டீசலில் ஓடக்கூடியவையே.
கடந்த ஆண்டில் மட்டும் 23 % மானிய விலை டீசல் எஸ்.யூ.வி எனப்படும் உயர் ரக
சொகுசுக் கார்களுக்கு சென்றடைந்துள்ளது.
பெட்ரூல்
: மானிய விலை பெட்ரூல் என்பது இன்றைய நடுத்தர மற்றும் ஏழை மக்களின்
வரப்பிரசாதம். ஒவ்வொரு முறை பெட்ரூல் விலை ஏற்றப்படும்போது, பல வீட்டு
பட்ஜெட்டில் துண்டல்ல பெரிய போர்வையே விழும் என்பதை யாரும் மறுக்க முடியாது. பெட்ரூல் இவ்வளவு அதிக விலையில் விற்றும், அதி
வேக 150 சிசி, 200 சிசி இரு சக்கர வாகனங்களின் விற்பனை
அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆக மானிய விலைப் பெட்ரூலும் தவறான
கைகளுக்கு சென்றடைகிறதோ என்ற சந்தேகம் வலுக்கிறது.
இத்தனை
குளறுபடிகள் எதற்கு, மானியமே இல்லாமல் செய்துவிட்டால் என்ன என்று எண்ணத்
தோன்றலாம். ஆனால், எலிக்கு பயந்து வீட்டைக் கொளுத்த முடியாது. மானியங்கள்
அதற்குத் தகுதியான கரங்களுக்கு சென்றடைவதை
அரசு உறுதி செய்ய வேண்டும். இந்தப் பொருட்கள் அனைத்தையும் பங்கீடு
முறையில் அவரவர் தேவைக்கேற்றார் போல் விநியோகித்தால் மானியம் சரியான கைகளை
சென்றடையும்.
எண்ணற்ற செலவுகளை அரசு செய்கிறது அதனால் அரசு வைக்கும் வாதம் அதாவது பொருளாதார சீர்கேட்டுக்கு மானியங்கள்தான் காரணம் என்ற எண்ணம் தோன்றலாம், அரசு எப்படி இந்த மானியங்களை அளிக்கிறது, அதில் இருக்கும் சூச்சுமங்கள் என்ன என்பதை அடுத்த பதிவில் காணலாம்.
(குறிப்பு : மேற்கூறிய புள்ளி விவரங்கள் அனைத்தும் இந்தப் பதிவிற்காக பல்வேறு வலைதளங்களில் நான் சேகரித்தவை.
வேண்டுகோள் : நான் பொருளாதாரம் படித்தவன் இல்லை, நான் பதிந்திருப்பது நான் படித்த செய்திகளிலிருந்து எனக்குத் தோன்றிய கருது, பொருளாதாரம் அறிந்தவர்கள் இதற்கு மாற்றுக் கருத்து இருந்தாக் தெரிவிக்கலாம்.)