யாராவது இருக்கீங்களா ?

தேர்தல் நேரம் வந்துவிட்டது, இனி நாம் அதிகம் கேட்க போகும் வார்த்தைகள் என்னவென்று நமக்கே தெரியும். அவர்கள் சொல்வதை நாம் நம்பாதது போல் நடித்தாலும், தேர்தல் அன்று மாமன் சொன்னான், மச்சான் சொன்னான், எம் .ஜி. ஆர் சொன்னார், அண்ணா சொன்னார் என்று எதாவது ஒரு கட்சிக்கு அளிக்கத் தான் போகிறோம் வாக்கை பின்பு வளிக்கத் தான் போகிறோம் நாக்கை.

நாம் இப்படி ஏமாளியாக இருக்க காரணம் என்ன, நம் செவிகள் தான். "பேசி பேசி ஆட்சியவே புடுச்ச பரம்பர நம்ம பரம்பர", என்பது நம் அரசியல்வாதிகளுக்கு நிச்சயம் பொருந்தும். ஆனால் அவர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருப்பது நம் நாட்டு வழக்கம் தான். அப்படி அவர்கள் நம்மை என்ன சொல்லி ஏமாற்றுகிறார்கள்.


தமிழ் ! தமிழ் !! தமிழ் !!!

நினைவு தெரிந்த நாளில் இருந்து இதை சொல்லியே ஒரு தலைவர் பிழைப்பு நடத்தி கொண்டு இருக்கிறார். இவர் இப்படி சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை. காரணம், இந்தி நம்மை ஊடுருவாமல் காத்த பெருமை இவருக்கும் சேரும். அதற்காக இவரை நல்லவர் என்றும் சொல்லி விட முடியாது.

தமிழக மக்களை இலவசங்களுக்கு அடிமை படுத்திய பெருமை இவருக்கே. இலவச வேட்டி சேலை, இலவச தொலைக்காட்சிப் பெட்டி என்று கொடுத்து நம்மை சோம்பேறி ஆக்கி விட்டார்.
[பி. கு. : எங்கள் வீட்டிலும் ஒன்று வாங்கி வைத்திருக்கிறோம், இலவசம் என்றால் யாருக்குத் தான் கசக்கும்]

இவருக்கு கட்சிதமாக பொருந்தும் மூன்று வார்த்தைகள் என்னவென்றால், "ஸ்டாலின், அழகிரி, கனிமொழி".

எம். ஜி. ஆர் ! எம். ஜி. ஆர் !! எம். ஜி. ஆர் !!!

இந்த அம்மையார் தமிழ் நாட்டின் இந்திரா காந்தி என்று சொன்னால் அது மிகை அல்ல. ஆட்சி நடத்தும் முறையில் இவர் இந்தியாவுக்கே ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் இவரின் சர்வாதிகார போக்கு இவரை பின்னுக்குத் தள்ளி விட்டது.

இன்றும் எம். ஜி. ஆர் பேரை சொல்லியே ஒட்டு வாங்கி கொண்டு இருக்கும் இவருக்கு பொருத்தமான மூன்று வார்த்தைகள், "சசிகலா, கொடநாடு, டாஸ்மாக்".


மக்கள் ! மக்கள் !! மக்கள் !!!

அடுத்த எம். ஜி. ஆர் நான் தான் என்று சொல்லி அரசியலுக்கு வந்தவர், முதல் மாநாடு மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது (நான் கூட சென்றிருந்தேன் இவரை பாக்க மட்டும், கேக்க அல்ல). முதல் தேர்தலில் இவர் மட்டும் இவர் கட்சியிலிருந்து வெற்றி பெற்றார்.

மக்களுடன் மட்டுமே கூட்டணி என்று சொல்லிக்கொண்டிருக்கும் இவரின் எதிர்காலம் கேள்விக்குறியே. இவருக்கு மட்டுமே பொருத்தமான வார்த்தைகள், "சரக்கு, சரக்கு, சரக்கு".

ஆக நம்மை ஏமாற்றுவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் இவர்களை மீறி ஒருவர் ஆட்சிக்கு வருவது கடினம் தான் ஆனால் கண்டிப்பாக சாத்தியம். அப்படி யாராவது?

பாரதி !!!

தேடிச் சோறுநிதன் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி

மனம்வாடி துன்பமிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து

நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிறைஎனப்பின் மையும்

பல வேடிக்கை மனிதரைப் போல்
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?

நின்னைச் சில வரங்கள் கேட்பேன்
அவைநேரே இன்றெனக்குத் தருவாய்

என்றான் முன்னைத் தீயவினைப் பயன்கள்
இன்னும்மூளாதழிந்துடுதல் வேண்டும்

இனி என்னைப் புதிய உயிராக்கி
எனக்கேதுங் கவலையறச் செய்து

மதிதன்னை மிகத் தெளிவு செய்து
என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய் ...